
ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கோ, போர்க்குற்றங்களுக்கோ முள்ளிவாய்க்காலை மட்டும் சாட்சியமாகக் கொள்ள முடியாது. ஆனால், இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் 1948களிலிருந்து இன்றுவரை ஈழத்தமிழர்கள் மீது பௌத்த மேலாதிக்கவாதிகளால் புரியப்பட்ட மிகமோசமான படுகொலைகளுக்கான பிpரதான சாட்சியமாக முள்ளிவாய்க்காலைப் போன்று, செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியை அடையாளப்படுத்தப்படுத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
செம்மணி சித்துப்பாத்தி மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் நேற்றுவரை 52 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழப்படும் பகுதிகளிலிருந்து மழைநீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட கால்வாய்களில் கூட மூன்று இடங்களில் என்புச் சிதிலங்கள் தென்பட்டுள்ளன என்றால் இனப்படுகொலைக்கான வலுவான சாட்சியமாக அந்த மனிதப் புதைகுழியை அடையாளப்படுத்த முடியும். ஆனால் எழுபது ஆண்டு காலமாக தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியோடு நிறுத்திக்கொள்ள இந்த அரசாங்கமும் தன்னாலான பிரயத்தனங்களை முன்னெடுக்கக்கூடும் என்ற அடிப்படையில், இன அழிப்புக்கான பொறுப்புக்கூறலும் பரிகார நீதியும் பரந்துபட்ட அளவில் அணுகப்பட வேண்டும் என்பதில் நாமும், நீதியை நாடும் எல்லாத் தரப்புகளும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும்.
உலகின் மனச்சாட்சியை உலுக்கும் உணர்வுசார்ந்த படுகொலை அடையாளமான செம்மணி மனிதப் புதைகுழியோடு, மன்னார், கொக்குத்தொடுவாய், திருக்கேதீஸ்வரம், மண்டைதீவு உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பிலும் முறையான நீதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் 2009 ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட போது, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் காணாமலாக்கப்பட்டும், கொகல்லப்பட்டும் உள்ளதாக அப்போதைய மன்னார் மறைமாவட்ட ஆயர் மறைந்த இராஜப்பு ஜோசப் அவர்கள் வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைகளுக்கான அடிப்படையாக செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் அணுகப்பட வேண்டும் – என்றார். விவசாயிகள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குங்கள்..! – சிறீதரன் எம்.பி கோரிக்கை…!!!
யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையால், வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிப்படைந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ், பாராளுமன்றக் குழுத் தலைவராக, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்ஹ அவர்களிடம் வாய்மொழி மூல விடைக்கான வினாக்களை முன்வைக்கும் போதே அவர் இவ்விடயம் தொடர்பில் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் சார்ந்து, அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அச்சுவேலி மற்றும் பத்தைமேனி பிரதேச விவசாயிகளுடன் நடைபெற்ற சந்திப்பை மேற்கோள்காட்டி அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் சார்ந்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
விவசாய மாவட்டமான யாழ்ப்பாணத்தில் நெற்செய்கைக்கு மேலாக உப உணவுப் பயிர்களான சின்ன வெங்காயம், வேதாளக்காய் வெயங்காயம், உருளைக்கிழங்கு, திராட்சை, கரட், கரணைக்கிழங்கு, பீற்றூட், வாழை, மரவள்ளி, மிளகாய் போன்ற பயிர்கள் வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் மேற்கு, வடமராட்சி தெற்கு மேற்கு, வடமராட்சி கிழக்கு, தீவகம், தென்மராட்சி போன்ற பெரும் பிரதேசங்களின் பேரூர்களில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, இவ்வூர்களில் வாழும் விவசாயிகள் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்து, அறுவடை செய்யும் போது இறக்குமதி வரி விதிப்பு செய்யப்படுவது வழமை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக இவ்வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. காலநிலைப் பாதிப்புகளையும் கடந்து உப உணவுப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் யாழ்ப்பாண விவசாயிகளின் நடைமுறை இடர்பாடுகள் எவை என்பதையும், யாழ்ப்பாணச் சின்ன வெங்காயத்துக்கான கேள்வி தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதையும், கடந்த இரண்டு வருடங்களாக உற்பத்திக்கான மானிய அடிப்படையிலான விதை உருளைக்கிழங்கு கிடைக்கப்பெறவில்லை என்பதையும், இத்தகைய காரணிகளால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியதுடன் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்படும் காலத்தில், விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் அரசால் இறக்குமதிகளுக்கு எதிரான வரி விதிக்கப்படுமா? என்பதையும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் அமைச்சர் சபைக்கு அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதேவேளை, இவ்வருடம் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் முதலை முழுமையாக இழந்துள்ளதுடன், உற்பத்திப் பொருளின் தரமும் குறைந்துள்ளது. இத்தகைய பாதிப்பை எதிர்கொண்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீளமைக்கும் வகையில் நட்டஈடு வழங்கும் திட்டம் அரசிடம் உள்ளதா என்றும் காலாகாலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்குச் செய்கை பாதிப்படையும் வகையில், மானிய அடிப்படையிலான விதைக் கிழங்கு கிடைக்கப் பெறாமைக்கும், தரமான புதிய இனங்கள் அறிமுகம் செய்யப்படாமைக்கும் காரணம் என்ன என்பதை அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
பார உலோகம் நிறைந்துள்ளதாக கூறப்படுவதன் அடிப்படையில் கிருமிநாசினிப் பயன்பாடு குறைவடைந்துள்ள நிலையில்;, இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு பார உலோகம் உண்டா – இல்லையா என்பதை மக்களுக்கு எவ்வாறு தெளிவுபடுத்துவது என்பதற்கு அமைச்சரின் பதில் என்ன என்றும், வடக்கு மாகாணத்தில் மட்டும் இந்த உற்பத்திப் பொருட்களுக்கு பத்திற்கு ஒன்று கழிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்தக் கழிவுமுறை தம்புள்ள, மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்களுக்கு ஏன் பின்பற்றப்படுவதில்லை என்றும் சிறீதரன் எம்.பியால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பதிலளிப்பதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.