
‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் முதன்முறையாக துருக்கியில், கடந்த வாரம் நேரடி பேச்சு நடத்தினர். இரண்டு மணி நேர பேச்சின் முடிவில், இரு நாட்டு போர்க்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, நேற்று முன்தினம் முதல் இரு தரப்பிலும் போர்க்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், ரஷ்யாவின் மாஸ்கோ உள்ளிட்ட பல இடங்களில் உக்ரைன் ராணுவம் நேற்று முன்தினம் ஏவுகணைகள் வாயிலாக தாக்குதல் நடத்தியது. இதில், பெரும்பாலானவை இடைமறித்து வீழ்த்தப்பட்டன.
இதற்கு பதிலடி தரும் வகையில், உக்ரைன் தலைநகர் கீவில், ரஷ்யா நேற்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது. அடுத்தடுத்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ‘ட்ரோன்’களை சமாளிக்க முடியாமல், உக்ரைன் ராணுவம் திணறியது. அடுத்தடுத்து பாய்ந்து வந்த ஏவுகணைகள் குடியிருப்புகள், கடைகள் மீது விழுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தின.
ஒரே சமயத்தில் 20க்கும் மேற்பட்ட ஏவுகணை வீசப்பட்டதை அடுத்து, கீவ் நகரம் முழுதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன.
இதையடுத்து, குடியிருப்பு வாசிகள் அனைவரும் பதுங்கு குழிகளிலும், நிலத்தடி சுரங்கப் பாதைகளிலும் தஞ்சம் அடைந்தனர். ஏழு மணி நேரத்துக்கும் மேலாக விட்டுவிட்டு நடத்தப்பட்ட தாக்குதலால், நகரெங்கும் பதற்றம் நிலவியது.
இந்த தாக்குதலில் ஆறு பேர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக கீவ் நகர நிர்வாகம் தெரிவித்தது.
போர் நிறுத்தத்தின் அறிகுறியாக, இரு தரப்பிலும் போர்க் கைதிகள் விடுவிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே மீண்டும் தாக்குதல் துவங்கியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.