
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெல் அழிவுக் கொடுப்பனவுகளை வழங்காவிட்டால் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்சபைக்கெதிராக போராட்டம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரித்துள்ளார்.
அத்தோடு குறித்த கொடுப்பனவுகளை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கத்தவறினால் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்சபை முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து உடனடியாக வெளியேறவேண்டுமெனவும் மிகக் கடுமையாக எச்சரித்தார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 18.07.2025 நேற்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற நெல் அழிவுகளுக்கான கொடுப்பனவுகள் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்சபையால் இதுவரை வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு எச்சரித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் மிகக்கடுமையான இந்த எச்சரிப்பையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒருவாரத்திற்குள் நெல் அழிவுகளுக்கான கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்சபையால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் விகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாம் தொடர்ந்து வன்னிப் பகுதியிலுள்ள அனைத்து அபிவிருத்தி ஒருங்கிணைக்குழுக் கூட்டங்களிலும் கலந்துகொள்கின்றோம். அந்தவகையில் மன்னாரில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச்சபையால் நெல் அழிவிற்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில், இந்த புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெல்அழிவிற்கான கொடுப்னவுகள் இதுவரை வழங்கப்படவில்லை.
இவ்வாறு நெல் அழிவிற்கான கொடுப்பனவுகள் உரிய பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படாமைக்கான காரணம் என்ன. கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்சபையினர் இவ்வாறான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களுக்கு வருகைதந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுப்பனவுகள் உடனடியாக வழங்கப்படுமென்கின்ற பொய்களை இங்கே கூறிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்தும் இங்கு வந்து இவ்வாறு பொய்களைக் கூறிக்கொண்டிருக்கமுடியாது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒருவாரத்திற்குள் நெல் அழிவிற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவேண்டும். அவ்வாறு வழங்கத்தவறினால் விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலைஏற்படும்.
எமது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கமுடியவில்லையெனில் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்சபை முல்லைத்தீவுமாவட்டத்திலிருந்து வெளியேறவேண்டுமெனத் தெரிவித்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய கொடுப்பனவுகள் ஒருவாரத்திற்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென இதன்போது கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்சபை உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.