
புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள 1500 காணியற்றோருக்கும் உடனடியாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட காணிஅற்றோருக்கு திம்பிலிப் பகுதியில் கால் (0.25)ஏக்கர் வீதம் பகிர்ந்து வழங்குவதற்கு தம்மால் நடவடிக்கை எடுக்கப்படுமென புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் (18) நேற்று இடம்பெற்றது. குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நாடாளுமன்றஉறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
ஏனைய மாவட்டங்களைப் பொறுத்தவரை காணியற்றோர் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றனர். ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியற்றோர் மிகவும் அதிகளவில் காணப்படுகின்றனர். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389பேர் காணியற்றவர்களாகக் காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அதிலும் குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப்பிரிவில் காணியற்றோராக 1500பேர் காணப்படுவதாக பிரதேசசெயலகப் புள்ளிவிபரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
இந்நிலையில் காணியற்றவர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். எனவே புதுக்குடியிருப்பில் இருக்கின்ற இந்த காணியற்ற மக்களுக்கு காணிகளை வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.
இந்நிலையில் புதுக்குடியிருப்புப் பிரதேசசெயலாளர் இதற்கு பதிலளிக்கையில்,
புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட திம்பிலிப் பகுதியிலுள்ள அரசகாணிகள் அளவீடு செய்யப்பட்டு காணியற்றோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
அதனடிப்படையில் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவிலுள்ள காணியற்றவர்களுக்கு திம்பிலிப் பகுதியில் 0.25ஏக்கர் வீதம் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதேசசெயலாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.