
பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர், அனைத்துக் கட்சி உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் ஒன்றிணைத்து (NPP தவிர்ந்த) கண்டணக் கவனயீர்ப்பு போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து இன்று (25) நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்றது.
பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் வழங்கப்பட்டது.
நகர்ப் பகுதியை மையப்படுத்தி அமைக்கப்பட்டள்ள இராணுவ முகாம்களால் பருத்தித்துறை நகரின் வளர்ச்சி பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பருத்தித்துறை நீதிமன்றம் இடப்பற்றாக்குறை காரணமாக இடமாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றத்தின் நீதவான் வாசஸ்தளத்தினையிம் நீதிமன்றிற்கான காணியில் இராணுவம் முகாமிட்டுள்ளனர். குறித்த முகாம் அகற்றப்பட வேண்டும் அம் முகாம் அகற்றப்பட்டால் நீதிமன்றம் இடமாற்றம் தேவையற்றது.
இரண்டாவதாக பருத்தித்துறை தபாலகத்தின் காணியையும் இராணுவம் முகாமிட்டுள்ளது. தபாலகம் வாடகை கட்டடத்தில் இயங்க வருகிறது. இக் காணியையும் விடுவிக்க வேண்டும் .
அத்துடன் பருத்தித்துறை வெளிச்ச வீட்டு வளாகத்தையும் கடற்படை முகாமிட்டுள்ளது இக் காணியும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே போராட்டக் குழுவினரது கோரிக்கை.
குறித்த போராட்டத்திற்கு பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் காலை 09:30 மணி வரை தமது வர்த்தக நிலையங்கள் பூட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர். சந்தை வியாபாரிகளும் வியாபார நடவடிக்கைகளை நிறுத்தி ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், EPRLF தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் எஸ்.வேந்தன், வலி வடக்கு தவிசாளர் தி.நிரோஸ்,
வின்சன்டி போல் டக்ளஸ் போல் நகர பிதா பருத்தித்துறை நகர சபை தம்பிராசா சந்திரதாஸ் தலைவர் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.