
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் மக்களுடன் அடாவடித்தனமாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது தலையீட்டையடுத்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமது முறைப்பாட்டை ஏற்று, மக்களுடன் அடாவடித்தனமாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கெதிராக விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியின் துரித செயற்பாட்டை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய ரொட்விக்கோ என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையப்பிரிவிற்குட்பட்ட மக்கள்மீது பொய் குற்றங்களைப் பதிவுசெய்வது, மக்கள்மீது அத்துமீறித் தாக்குவது, மக்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும் வகையில் செயற்படுவது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் கடந்த 09.08.2025அன்று முறைப்பாடுசெய்யப்பட்டிருந்தது.
மக்களின் இந்த முறைப்பாட்டையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உடனடியாக குறித்த அத்துமீறல் செயற்பாட்டில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தருக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஒட்டுசுட்டான் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வலியுறுத்தியிருந்தார்.
அத்தோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனில் எதிர்வரும் 16.08.2025சனிக்கிழமையன்று ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் மக்களால் முற்றுகையிடப்பட்டு பாரிய போராட்டம் மேற்கொள்ளப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரித்துமிருந்தார்.
இத்தகையசூழலில் குறித்த அத்துமீறல் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வெலி ஓயா பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் பொறுப்பதிகாரிநேற்று (11) காலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தெரியப்படுத்தியிருந்ததுடன், அதன்பின்னர் முத்துஐயன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் நேரடியாகவும் சந்தித்து தெரியப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் இவ்விடயத்தில் தமது வலியுறுத்தலையேற்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக துரிதநடவடிக்கை மேற்கொண்ட ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் செயற்பாட்டை வரவேற்பதாக நடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.