
நட்டாங்கண்டல் வைத்தியசாலையில் இருந்து மீளப்பெறப்பட்ட நோயாளர் காவு வண்டி- மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் அசமந்த போக்கு காரணமா?
முல்லைத்தீவு மாவட்டத்தின் நட்டாங்கண்டல் பிரதேச வைத்தியசாலைக்கான நோயாளர் காவு வண்டி கடந்த 15 நாட்களாக சேவையில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
கடந்த 15 நாட்களாக பிரதேச வைத்திய சாலையான நட்டாங்கண்டல் வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி
இல்லாமை காரணமாக மாந்தை கிழக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு பிரதேச மக்களாகிய தாம் பெரும் துயரங்களை சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனர்
குறிப்பாக நட்டாங்கண்டல் பிரதேசத்தை அண்டிய பாண்டிய குளம், மூன்று முறிப்பு, பனங்காமம், கரும்புள்ளியான் குளம், செல்வபுரம உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் குறித்த வைத்திய சாலையின் சேவையை நம்பியே இருப்பதாகவும் கடந்த 15 நாட்களாக அவசர நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தினால் முச்சகர வண்டிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் தொடக்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தே மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர்
அதேவேளை, உரிய நேரத்துக்குள் சிகிச்சையை பெற வேண்டிய நோயாளர்கள் உயிரிழக்கும் அபாய நிலையும் ஏற்படும் சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்
இதேவேளை இங்கிருந்து சேவையிலிருந்த அவசர நோயாளர் காவு வண்டி முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்
3000 க்கும் மேற்பட்ட மக்களுக்கான சேவையை வழங்கும் நட்டாங்கண்டல் பிரதேச வைத்திய சாலைக்கு சாரதியும் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையும் குறித்த பகுதிக்கு துணுக்காய் கல்வி வலயத்தில் கடமையாற்றிய சாரதி ஒருவர் மாற்றம் பெற்ற போதும் இதுவரை அவர் குறித்த பகுதியில் கடமைகளை பொறுப்பேற்காத நிலையும் , அவசர நோயாளர் காவு வண்டி குறித்த பகுதிக்கு கிடைக்கபெறாது என்ற சந்தேகத்தையே மேலும் வலுவாக்குகின்றது என்றும் , பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.