
ரஷ்ய அரசால் பயங்கரவாதம் என வகைப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை இணையத்தில் தேடுவோருக்கு தண்டனை வழங்கும் சட்ட மசோதாவுக்கு அந்நாட்டு பார்லிமென்ட் நேற்று ஒப்புதல் அளித்தது.
ரஷ்யா தன் அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022ல் போரை துவங்கியது.
இந்த போருக்கு ரஷ்யாவில் பரவலாக எதிர்ப்பு உள்ளது. இதனால் இணையம் மற்றும் சமூக வலைதள தணிக்கை அதிகரித்தது. அது தொடர்பாக அதிக வழக்குகள் பதியப்பட்டன.
இந்நிலையில், புதிய இணைய சட்ட மசோதாவை ரஷ்யா கொண்டு வந்தது. சமீபத்தில் கீழ் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, நேற்று மேல்சபையிலும் நிறைவேறியது. விரைவில் அதிபர் விளாடிமிர் புடின் இந்த சட்டத்தில் கையெழுதிட உள்ளார்.
இந்த மசோதாவின் படி இணையத்தில் பயங்கரவாதம் என வகைப்படுத்தப்பட்ட தகவல்களை தேடுவோருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
ஆனால் ரஷ்யாவில் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் எதிர்க்கட்சிகளையும் சேர்த்துள்ளனர்.
மறைந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியால் துவக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளை ஆகியவையும் அரசால் பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.