
வன்னிப் பகுதிகளில் கால்நடைகளுக்கான மேச்சல்தரவைஇன்மை பாரிய பிரச்சினையாகக் காணப்படும்நிலையில், குறித்த விடயத்தை அமைச்சரவைக்கு கொண்டுசென்று தீர்மானங்களை நிறைவேற்றி கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென துரைராசா ரவிகரன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருக்கே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மேச்சல்தரவை இன்றி கால்நடைகள் மிகமோசமாகப் பாதிக்கப்படுகின்றன. அத்தோடு வீதிகள் முழுவதும் கால்நடைகள் காணப்படுவதால் பொதுமக்களும் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மனிதருக்கும் காணியில்லை, கால்நடைகளுக்கும் காணியில்லாதநிலை காணப்படுகின்றது. அந்தவகையில் புள்ளிவிபரங்களின்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389 மக்களுக்கு காணியில்லாத நிலைகாணப்படுகின்றது.
வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் நிலப்பரப்பில் கூடிய மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டமே காணப்படுகின்றது. ஆனால் மக்களுக்கும், மாடுகளுக்கும் காணியில்லாத நிலையே காணப்படுகின்றது.
மேச்சல் தரவை என்பது கட்டாயத் தேவையாகக் காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு இலட்டத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் காணப்படுகின்றன. மன்னாரில் 140,000கால்நடைகள்வரையில் காணப்படுவதுடன், வவுனியாவில் 130,000 கால்நடைகளும் காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் மூலம் அறியமுடிகின்றது.
எனவே பிரதேச அபிவருத்திக்குழுத் தலைவர் இந்த விடயத்தில் கூடுதல் கவனத்துடன் செயற்படவேண்டும். இந்தவிடயத்தை அமைச்சரவை மட்டங்களுக்கு கொண்டுசென்று தீர்மானங்களை எடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.