
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி 24 மணி நேரத்தை கடந்து இரண்டாவது நாளாக மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்: அரசு அதிகாரிகளின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்த மீனவர்கள்:
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், இலங்கை வசம் உள்ள படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் நேற்று தொடங்கிய உண்ணாவிரதம் இன்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
மீனவர்கள் இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடிக்க துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 23ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 32 மீனவர்கள் மற்றும் ஐந்து விசைப்படகையும், இலங்கை கடற்படையால் முன்னதாக சிறை பிடிக்கப்பட்ட இலங்கை சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான மீனவர்கள் மற்றும் இலங்கை வசமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
மீனவர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று மாலை முடித்துக்கொள்ளப்பட்டு நேற்று இரவு முதல் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று இரண்டாவது நாளாக மீனவர்களின் காத்திருப்பு போராட்டம் காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை அழைத்தனர். ஆனால் மீனவர்கள் அழைப்பை நிராகரித்து தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களின் இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மே 17 இயக்கம், அதிமுக, தமிழ்நாடு வைகை பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் காத்திருப்பு பந்தலுக்கு வந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதே கோரிக்கை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து இன்று ஆறாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.