
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப்பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ)பகுதியில் மின்சாரம் இன்மை மற்றும் வீதிகள் சீரின்றிக்காணப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் விவசாயக்குடும்பங்கள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (15) குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், அப்பகுதிமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தேவிபுரம் (அ)பகுதியில் இரண்டாம் குறுக்குவீதி மற்றும் மூன்றாம் குறுக்குவீதிப் பகுதிகளில் 24இற்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் வாழ்ந்துவருவதுடன், அப்பகுதியில் 200ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் விவசாயநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இருப்பினும் இதுவரை அப்பகுதிக்கு மின் இணைப்பு பொருத்தப்படவில்லை.
இவ்வாறு மின்இணைப்பு பொருத்தப்படாத காரணத்தினால் குறித்த பகுதிகளில் வசிக்கும் விவசாயக்குடும்பங்கள் தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வதில் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
குறிப்பாக இப்பகுதியில் மின்இணைப்பு பொருத்தப்படாமையினால் எரிபொருளின் பயன்பாட்டில் இயங்கும் நீர்இறைக்கும் இயந்திரங்களைக்கொண்டே விவசாயிகள் தமது பயிற்செய்கைகளுக்கு நீர்ப்பாசனம் செய்கின்றனர். இதனால் எரிபொருளுக்கு அதிகளவில் செலவுசெய்யவேண்டியுள்ளதாக அப்பகுதி விவசாயக் குடும்பங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கவலைதெரிவித்தனர்.
அதுமாத்திரமின்றி குறித்தபகுதியில் காட்டுயானைகளின் தொல்லை இருப்பதாகவும், அண்மையில் குறித்தபகுதியில் பெருமளவான தென்னைகளை காட்டுயானைகள் அழித்துள்ளதாகவும், ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கும் காட்டுயானைகளால் சேதம் ஏற்படுவதாகவும் இதன்போது அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
எனவே அப்பகுதிக்கு மின்னிணைப்பினை வழங்கினால் எரிபொருளுக்கான பாரிய செலவீனம் குறைவடைவதுடன், மேலதிகமாகவும் பயிற்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்படுமென அப்பகுதி விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை குறித்த பகுதியில் மின்இணைப்புப் பொருத்தப்பட்டால் வீட்டிலும், தெருக்களிலும் மின் விளக்குகளைப் பொருத்துவதன்ஊடாக இரவுநேரங்களில் காட்டுயானைகள் வருவதையும் கட்டுப்படுத்தமுடியுமெனவும் விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டது.
எனவே குறித்த பகுதிக்கு விரைந்து மின்னிணைப்பினைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் இதன்போது கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இதுதவிர தேவிபுரம் (அ)பகுதி இரண்டாம் மற்றும் மூன்றாம் குறுக்குவீதிகள் சீரின்றிக்காணப்படுவதாலும் அப்பகுதியில் வசிக்கின்ற விவசாயக் குடும்பங்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றன.
குறித்த வீதிகள் சீரின்றிக்காணப்படுவதால் நெல்அறுவடைக்காலங்களில் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும், அறுவடைகளை எடுத்துச்செல்வதற்கு அதிகளவில் செலவீனங்கள் ஏற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டிருந்தனர். அதேவேளை வேலையாட்களை விவசாயநிலங்களுக்கு கொண்டுவருவதிலும் பாரிய சிக்கல் நிலமைகள் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.
எனவே 600மீற்றர்தூரமான இரண்டாம் குறுக்குவீதியையும், 1200மீற்றர் தூரமுள்ள மூன்றாம் குறுக்கு வீதியைம் விரைந்து சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரிடம் மக்களால் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல் நிலைமைகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மின்இணைப்புப் பொருத்துவது மற்றும் வீதிகளைச் சீரமைப்பதுதொடர்பில் தம்மிடம் கோரிக்கைக்கடிதங்களைக் கையளிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், மக்களால் முன்வைக்கப்பட்டகோரிக்கைகள் தொடர்பில் தம்மால் கவனம்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.
மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம் குகநேசனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.