
தற்போது வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக இந்தோனேசியாவில் இருந்து 5 போதைவஸ்து வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றார்கள். அதனைத் தொடர்ந்து நுவரேலியாவில் மெத்தெனிய மற்றும் தங்காலை போன்ற இடங்களில் போதைப் பொருட்கள் தயாரிப்பதற்கான இரசாயனங்கள் நிலத்தடியில் இருந்து பெறப்பட்டிருக்கின்றன.
கிட்டத்தட்ட 50,000 கிலோ கிராம் எடையுள்ள போதைப்பொருள் உற்பத்தி செய்யக்கூடிய இரசாயனங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில் கிளீன் ஸ்ரீலங்கா எனும் திட்டத்தின் கீழ் இவ்வாறு போதைப்பொருட்களுக்குரிய மூலப் பொருட்கள் அல்லது இரசாயனங்கள் கைப்பற்றுவதென்பது நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் இந்த அளவிற்கு அதிகமான போதைப் பொருட்கள் இலங்கைக்குள் வந்திருக்கின்றது என்றால் நிச்சயமாக போதைப்பொருள் வியாபாரிகளோ அல்லது முக்கியஸ்தர்களாலோ, இது முடிந்திருக்காது. இதற்குப் பின்னால் பலமான அரசியல் சக்திகள் இருந்திருக்கின்றன அதற்கு துணையாக பொலிஸ் சக்திகளும் இருந்திருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை(07.09.2025) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவிதத்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..
போதைப் பொருள் வியாபாரிகள் நேரடியாகவே இந்த விடயத்தில் ஈடுபடுத்துந்தவர்கள் இவர்களுக்கு பின்னாலிருந்து செயற்படுகின்றவர்கள் காணப்படுகின்றார்கள். அரசியல் சக்திகள் அல்லது காவல்துறை சக்திகளும் உள்ளனர் அவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஏனெனில் எய்தவர்கள் இருக்க அம்புகள் மாத்திரம்தான் மாட்டிக் கொள்ளும் காலமாக இருக்கின்றன கர்த்தாக்கள் பிடிபடாமல் கருவிகள் பிடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
எனவே கிளீயின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் முழுமையாக இந்த நாட்டில் இருந்து போதை வஸ்து ஒழிக்கப்பட வேண்டும். வெளிநாடுளிலிருந்துதான் போதைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுவதாக இதுவரைக்கும் நினைத்திருந்தார்கள். ஆனால் தற்போது கிடைத்திருக்கின்ற தகவல்களின்படி மெத்தெனிய போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பிரமாண்டமான அளவுக்கு அதிகமான போதைவஸ்து பொருட்களை பார்க்கின்ற போது அங்கு ஒரு தொழிற்சாலையே இயங்கி வந்திருப்பதாக அப்பகுதியில் கூறப்படுகின்றன.
சட்ட விரோதமான போதைப் பொருள் தொழிற்சாலை இலங்கையில் இயங்கி வருகின்றது என்றால் அதற்கு நிச்சயமாக அதனை பாதுகாப்பதற்குரிய பெரிய அரசியல் சக்திகள் இருந்திருக்க வேண்டும். காவல்துறை சக்திகளும் இருந்திருக்க வேண்டும்.கைது செய்யப்பட்டவர்களை முறையாக விசாரிக்கப்படுகின்ற போது அவர்களுடைய இயக்குனர்கள் யார் பணிப்பாளர்கள் யார் இதனை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எப்படியான மர்மமான திட்டங்கள் கையாளப்பட்டிருந்தன என்ற உண்மைகளை கண்டறிய முடியும். என கூறினார்.