
வன்னிப்பிராந்தியத்தில் ஆசிரியர்பற்றாக்குறை அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இனிய மாவட்ட ஒதுக்கீட்டுமுறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளவேண்டுமென்ற தீர்மானத்தையும் முன்மொழிந்துள்ளார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டநிலையில், ஏகமனதாக ஏற்றுகொள்ளப்பட்டிருந்து.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வன்னிப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை ஆசிரியர் அதிகஅளவில் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.
இதனால் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் கல்வியில் பாரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும்போது வடக்கு மாகாணத்திற்கென போட்டித்தெரிவுகளைநடாத்தி மாகாண ஒதுக்கீட்டுமுறையில் நியமனங்களை வழங்குவதனாலேயே வன்னிப் பிராந்தியம் இவ்வாறு பாதிப்புக்களை எதிர்நோக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனவேதான் மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் போட்டித் தெரிவுகளை நடாத்தி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவேண்டுமென ஏற்கனவே பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தோம்.
அந்தவகையில் மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் போட்டித்தெரிவுகளை நடாத்தி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவேண்டுமென இந்த வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமென முன்மொழிகின்றேன் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த தீர்மானமானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.