சாம்பியன்ஸ் டிராபி துவக்க விழாவில் பங்கேற்பாரா ரோகித் சர்மா

கராச்சி: பாகிஸ்தானில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி துவக்க விழாவில், ரோகித் சர்மா பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப். 19-மார்ச் 9) நடக்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உட்பட உலகின் ‘டாப்-8’ அணிகள் கலந்து கொள்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்தது. இதையடுத்து இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டன. லீக் சுற்றில் இந்திய அணி, வங்கதேசம் (பிப். 20), பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்தை சந்திக்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் துபாயில் நடக்கும்.

கராச்சி தேசிய மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் (பிப்.19) பாகிஸ்தான், நியூசிலாந்து மோத உள்ளன. இதற்கு முன் பிப். 16 அல்லது 17ல் துவக்க விழாவை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) திட்டமிட்டுள்ளது. அப்போது 8 அணிகளின் கேப்டன்கள் பங்கேற்கும் வழக்கமான ‘போட்டோ-ஷூட்’ நடத்த உத்தேசித்துள்ளது.

இது குறித்து பி.சி.பி., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,”பாகிஸ்தானில் 1996ல் உலக கோப்பை தொடர் நடந்தது. 29 ஆண்டுகளுக்கு பின் பெரிய ஐ.சி.சி., தொடரான சாம்பியன்ஸ் டிராபி நடக்க உள்ளது. இதை கொண்டாட, பிப். 16 அல்லது 17ல் ‘மெகா’ துவக்க விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். சமீபத்தில் பாகிஸ்தான் வந்த ஐ.சி.சி., குழுவில் இடம் பெற்ற 3 இந்திய நிர்வாகிகளுக்கு ‘விசா’ வழங்கினோம். இதே போல இந்தியா உட்பட 8 அணிகளின் கேப்டன்கள், வீரர்கள், நிர்வாகிகளுக்கு ‘விசா’ வழங்கியுள்ளோம். இந்தியா சார்பில் ரோகித் சர்மா அல்லது ஏதாவது ஒரு வீரர், நிர்வாகிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கிறோம். ஐ.சி.சி., விதிமுறைப்படி கோப்பையுடன் கேப்டன்கள் தோன்றும் ‘போட்டோ-ஷூட்’ நடத்தப்படும்,”என்றார்.

VADALI TV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here