விரைவில் ஓய்வு அறிவிப்பாரா ரோகித்

மெல்போர்ன்: ரோகித் சர்மா நிலை பரிதாபமாக உள்ளது. ‘பார்ம்’ இல்லாமல் தவிக்கும் இவரால் ரன் எடுக்க முடியவில்லை. கேப்டன்சியும் எடுபடாததால், டெஸ்டில் இருந்து தானாக ஓய்வு பெறலாம்.

சமீபத்தில் பெங்களூருவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், ‘டாஸ்’ வென்ற ரோகித் சர்மா தவறாக ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்னுக்கு சுருண்டது. போட்டியிலும் தோற்றது. தொடரை 0-3 என முழுமையாக இழந்தது.

பும்ரா தலைமை: அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ‘பார்டர்-கவாஸ்கர்’ டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரோகித் பங்கேற்கவில்லை. பெர்த்தில் நடந்த இப்போட்டியில் இந்திய அணி கேப்டனாக பும்ரா மிரட்டினார். அணிக்கு தரமான வெற்றி தேடித் தந்தார்.

இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது. இம்முறை ரோகித் அணிக்கு திரும்ப, மீண்டும் கேப்டனாக களமிறங்கினார். துவக்க வீரருக்கு பதில் 6வது இடத்தில் வந்த இவர், தடுமாற, இந்தியா தோற்றது. பிரிஸ்பேன் டெஸ்டில் மழை கைகொடுத்தது. இரண்டு டெஸ்டில் 19 ரன் தான் (3,6,10) எடுத்தார்.

மீண்டும் துவக்கம்: மெல்போர்ன் டெஸ்டில் துவக்க வீரராக களமிறங்க விரும்பினார். இதற்காக சுப்மன் கில் நீக்கப்பட்டார். நேற்று துவக்க வீரராக வந்த ரோகித், 3 ரன்னுக்கு நடையைகட்டினார். கடந்த 8 டெஸ்டில் 155 ரன் தான் (சராசரி 11.07) தான் எடுத்துள்ளார். அணியில் வாய்ப்பு கிடைக்காது என அறிவுறுத்திய நிலையில் அனுபவ ‘ஸ்பின்னர்’ அஷ்வின் ஓய்வு பெற்றார். இதே போல ரோகித்திடமும், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் பேச திட்டமிட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா தகுதி பெற தவறினால், சிட்னி போட்டியுடன் டெஸ்டில் இருந்து ரோகித் ஓய்வு பெறலாம்.

இது பற்றி கிரிக்கெட் பிரபலங்கள் கூறியது:பாண்டிங்: ரோகித் ஆட்டத்தில் ஆக்ரோஷம் காணப்படவில்லை. கம்மின்ஸ் பந்தை மந்தமாக எதிர்கொண்டார். அவசரப்பட்டு அரை ‘புல்-ஷாட்’ அடித்து வீணாக அவுட்டானார். விரைவாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்.

ரவி சாஸ்திரி: சரியான நேரத்தில் சரியான பவுலர்களை பயன்படுத்த தவறினார் ரோகித். நேற்று முதல் ஓவரை பும்ரா வீசியிருக்க வேண்டும். ஆனால், சிராஜுக்கு வாய்ப்பு தந்தார். ஸ்டார்க் பேட் செய்த போது, லாங்-ஆன், லாங்-ஆப் திசையில் பீல்டர்களை தவறாக நிறுத்தினார். ‘ஸ்பின்னர்’கள் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தரை 40 ஓவருக்கு பிறகு பந்துவீச அழைத்தது புரியாத புதிராக இருந்தது.

கவாஸ்கர்: ரோகித் சர்மாவுக்கு இன்னும் மூன்று இன்னிங்ஸ் தான் உள்ளன. இதில் பிரகாசிக்க தவறினால், இவரது இடம் குறித்து கேள்வி எழும். மனசாட்சி உள்ள கிரிக்கெட் வீரர். அணிக்கு சுமையாக இருக்க மாட்டார். அணியின் நலனில் அக்கறை கொண்டவர். வரும் போட்டிகளில் ரன் எடுக்க தவறினால், அவராகவே அணியில் இருந்து விலகிவிடுவார்.

VADALI TV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here