இரண்டு நாள் பயிற்சி போட்டி இன்று துவங்குகிறது. இதில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. அடிலெய்டில் இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக (பிங்க் பால் டெஸ்ட், டிச. 6-10) நடக்க உள்ளது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன், இருநாள் பகலிரவு பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. இப்போட்டி கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று காலை 9:10 மணிக்கு (இந்திய நேரப்படி) துவங்கும்.
ஆஸ்திரேலிய அணி ஜேக் எட்வர்ட்ஸ் தலைமையில் களமிறங்குகிறது. மேட் ரென்ஷா, ஸ்காட் போலண்ட், சார்லி ஆண்டர்சன், சாம் கான்ஸ்டாஸ் போன்ற நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.
மீண்டும் சுப்மன்: பயிற்சி போட்டி என்பதால், இந்திய வீரர்கள் ‘ரிலாக்சாக’ காணப்பட்டனர். இடது கட்டை விரல் காயத்தில் இருந்து மீண்ட சுப்மன் கில், ரோகித் சர்மா, ரிஷாப் உள்ளிட்டோர் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டனர். யாஷ் தயாள், ஆகாஷ் தீப் பந்துவீசினர். அடிலெய்டு போட்டிக்கு ஏதுவாக, பேட்டிங் கூட்டணியில் மாற்றம் செய்யப்படலாம். அணிக்கு திரும்பிய கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் உடன் துவக்கத்தில் களமிறங்குவார். மூன்றாவது இடத்திற்கு சுப்மன், ராகுல் இடையே போட்டி காணப்படுகிறது.
ரோகித் 3வது இடம்: இது குறித்து இந்திய வீரர் புஜாரா கூறுகையில்,”இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் பெரிய மாற்றம் தேவையில்லை. முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால் (161 ரன்)-ராகுல் (26, 77) அசத்தினர். இவர்களே மீண்டும் துவக்க ஜோடியாக களமிறங்கலாம். மூன்றாவது இடத்தில் ரோகித், நான்காவதாக கோலி, ஐந்தாவது இடத்தில் சுப்மன் வரலாம். துவக்க வீரராக வருவதில் ரோகித் உறுதியாக இருந்தால், ராகுலை 3வது வீரராக களமிறக்கலாம். இதற்கு கீழே வருவது நல்லதல்ல. இவரை ‘டாப்-ஆர்டரில்’ தான் பயன்படுத்த வேண்டும்.
சுப்மனுக்கு 5வது இடம் பொருத்தமானது. துவக்கத்தில் இரு விக்கெட்டுகளை இழந்தாலும் கூட, பின்வரிசையில் வரும் சுப்மன் புதிய பந்தை எளிதாக சமாளிப்பார். பழைய பந்தில் ரிஷாப் பன்ட் அபாரமாக விளையாடுவார். அடுத்து அசத்த ‘ஆல்-ரவுண்டர்கள்’ நிதிஷ் குமார், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.
வாஷிங்டன் வாய்ப்பு: பவுலிங் பலமாக உள்ளது. பும்ரா, சிராஜ், ஹர்ஷித், வாஷிங்டன் சுந்தர் மிரட்டுகின்றனர். அனுபவ ‘ஸ்பின்னர்’ அஷ்வின், ரவிந்திர ஜடேஜா காத்திருக்க வேண்டும். பேட்டிங்கில் கைகொடுப்பது வாஷிங்டன் சுந்தருக்கு சாதகம்,”என்றார்.