ஹூஸ்டன்: சீன நிறுவனமான ‘டிக் டாக்’ செயலிக்கு, அமெரிக்காவில் விதிக்கப்பட்ட நிபந்தனையை அந்நிறுவனம் நிறைவேற்றாததால், அதன் தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
நம் அண்டை நாடான சீனாவின் ‘பைட்டான்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்று ‘டிக் டாக்’ செயலி. இந்த செயலியில் குறைந்த நேர வீடியோக்கள் அதிகம் இருக்கும்.
மேலும் பாடல்கள், சினிமா வசனங்களுக்கு வாய் அசைத்து வீடியோக்கள் வெளியிடலாம். இந்தியாவில் இந்த செயலி, 2020 ஜூன் வரை பயன்பாட்டில் இருந்தது. அப்போது கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய — சீன வீரர்களிடையே நடந்த மோதலை தொடர்ந்து, டிக் டாக் உட்பட 50க்கும் மேற்பட்ட சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில், 17 கோடி பேர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அந்த செயலி அமெரிக்க பயனர்களிடம் இருந்து சேகரிக்கும் தகவல்களை சீன அரசுக்கு வழங்க வாய்ப்பிருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து பைடன் நிர்வாகம், டிக் டாக் செயலி, அதன் தாய் நிறுவனமான ‘பைட்டான்ஸ்’ இடமிருந்து விலகி, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு விற்கப்பட வேண்டும் அல்லது தடையை எதிர்கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தது. அதற்கான கெடு ஜன., 19 என நிர்ணயிக்கப்பட்டது. இந்த சட்டத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
ஆனால், டிக் டாக் செயலி தாய் நிறுவனமான பைட்டான்சில் இருந்து விலகவில்லை. இதையடுத்து தடை உத்தரவுக்கு இணங்கி, தன் இயக்கத்தை டிக் டாக் நேற்று நிறுத்தியது.
இது தொடர்பாக பயனர்களுக்கு அந்நிறுவவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘துரதிர்ஷ்டவசமாக, டிக் டாக்கை தடைசெய்யும் சட்டம் அமெரிக்காவில் இயற்றப்பட்டது. அதனால், நீங்கள் இப்போதைக்கு டிக் டாக் பயன்படுத்த முடியாது.
‘டிக் டாக்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் தீர்வில் எங்களுடன் இணைந்து பணியாற்றுவதாக, அதிபர் பொறுப்பேற்க உள்ள டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இணைந்திருங்கள்’ என கூறியுள்ளனர்.
டிக் டாக் விவகாரத்தில், அதன் தாய் நிறுவனமான பைட்டான்சில் இருந்து விலக மேலும் 90 நாட்கள் நீட்டிப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியில், அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் கூறினார். எனவே, டிரம்ப் அதிபர் பதவியேற்றதும் டிக் டாக் மீண்டும் சேவையை வழங்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.