
வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளை சட்டவிரோதமாக அரசுடமையாக்கி அவற்றை குடியேற்றங்களுக்காக பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்று பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன். வடக்கு காணிகள் தற்போது இலக்கு வைக்கப்படுவதை போன்று கிழக்கு மாகாண காணிகளும் இலக்கு வைக்கப்படும். புலம்பெயர்ந்த தமிழர்களால் எவ்வாறு 3 மாத காலத்துக்குள் தமது பூர்வீக காணிகளை உறுதிப்படுத்த முடியும், என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பினார்.
காணி விவகாரம் இனப்பிரச்சினையுடன் தொடர்புடையது. இவ்விடயத்தை அலட்சியப்படுத்த முடியாது. அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டால் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களை பகைத்துக் கொள்ள நேரிடும். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் வழங்கியுள்ள செய்தியை கருத்திற் கொண்டு வர்த்தமானியை அரசாங்கம் உடன் இரத்துச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) நடைபெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ‘அ’ அட்டவணையின் ஒழுங்குவிதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்தில் 3669 ஏக்கர் காணிகள், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1703 ஏக்கர் காணிகள், கிளிநொச்சி மாவட்டத்தில் 515 ஏக்கர் காணிகள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் 54 ஏக்கர் காணிகள் என்ற அடிப்படையிலான 5941 ஏக்கர் தனியார் காணிகளை குறிப்பிட்ட காலப்பகுதிகளுக்குள் உறுதிப்பத்திரத்துடன் உறுதிப்படுத்தாவிடின் அவை அரசுடமையாக்கப்படும் என்று குறிப்பிட்டு அரசாங்கம் 2025.03.28 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை பிரசுரித்துள்ளது.
வடகிழக்கில் தமிழர் தாயகத்தில் வாழும் தமிழர்களின் சனத்தொகைக்கு இணையாக இன்று தமிழர்கள் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். உயிரச்சுறுத்தல் காரணமாகவே தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.
நெருக்கடியான நிலையில் தமது சொத்துக்கள் மற்றும் காணிகளை விட்டுச்சென்றார்கள். சட்டவிரோதமாக சென்று அகதி அந்தஸ்த்து கோரினார்கள்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களின் காணிகளை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத நிலைமை கணிசமான அளவில் காணப்படுகிறது.
கடந்த அரசாங்கம் புலம்பெயர்ந்தோர் காணிகள் குறித்து விசேட கரிசனை கொண்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தியிருந்தது. இனவாதிகள் என்று குறிப்பிடப்பட்ட கடந்த அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அச்சட்டத்தை நீக்காமல் பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் 3 மாத காலத்துக்குள் எவ்வாறு தமது காணிகளின் உரித்தை உறுதிப்படுத்த முடியும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் காணிகளை உரிமை கோரவேண்டிய நிலையிலும் அவர்கள் பல தடவைகள் இடம்பெயர்ந்துள்ளார்கள்.
சொத்துக்களையும், உடமைகளையும் விட்டுச் சென்றார்கள். இவ்வாறான நிலையில் குறித்த காணிகளை 3 மாத காலத்துக்குள் எவ்வாறு உறுதிப்படுத்துவது .இது ஏற்றுக்கொள்ள கூடியதொரு விடயமா, காணி தொடர்பான விடயங்கள் தமிழர்களின் இனப்பிரச்சினையின் அடிப்படையான அங்கமாகும் என்பதை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். இதனை இந்த அரசாங்கம் அறியவில்லையா,
இந்த காணிகளின் உறுதிகளை 3 மாத காலத்துக்குள் உறுதிப்படுத்தாவிடின் அவை அரசுடமையாக்கப்படும் என்று ஒரு வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளமை நியாயமற்றதொரு விடயமாக பார்க்கப்படுவதுடன், இயற்கை நீதிக்கு முரணானதாகவும் கருதப்படும்.
தமிழர்களின் காணிகளை சட்டவிரோதமான முறையில் பலவந்தமாக அபகரித்து அவற்றை குடியேற்றங்களுக்காக பயன்படுத்த போகிறார்கள் என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
அரசாங்கம் எதனையும் அறியாமல் தவறாக செய்யும் விடயம் என்று இதனை கருத முடியாது. பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் காணி விவகாரம் தொடர்பில் தொடர்ந்து பல விடயங்களை குறிப்பிட்டு வருகிறேன்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவத்தினர் மற்றும் அரச படையினர் தமிழ் மக்களை எதிரிகள் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார்கள்.
30 வருடகால யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழர் தாயகத்தில் மீண்டும் பிரச்சினை தோற்றம் பெற்றலாம், உரிமை போராட்டம் எழலாம் என்ற அச்சத்தில் அரசாங்கங்கள் தமிழர் தாயக பிரதேசத்தின் கரையோர பகுதிகளை பலவந்தமாக ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது.
தமிழ் மக்களின் கரையோர தொழில்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்தே தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.
தமிழர்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கான சொந்த மண்ணை பலவந்தமாக ஆக்கிரமிக்க இந்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. .இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கங்கள் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டது.
இனவாதிகள், இனவாதத்தை கக்கினார்கள், நாங்கள் புனிதமானவர்கள் என்று குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்தது. இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு அநியாயம் செய்யும் என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.
இது வெறும் தமிழர்களை மாத்திரம் குறிவைக்கும் விடயமல்ல, தமிழ் பேசும் மக்களை குறிவைக்கும் செயற்பாடாக மாறும். வடக்கு மாகாணத்தின் இலக்கு கிழக்கு மாகாணத்துக்கும் செல்லும்.
தமிழர்களுக்கு எதிரான இராணுவத்தின் செயற்பாட்டையும், இராணுவத்தின் மனநிலையையும் மாற்றியமைக்கும் முதுகெலும்பு இந்த அரசாங்கத்துக்கு கிடையாது. அல்லது இராணுவத்தின் இனவாத செயற்பாட்டுக்கு அரசாங்கமும் துணைபோகிறது என்றே குறிப்பிட வேண்டும்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் அடைந்துள்ள பாரியதொரு பின்னடைவை அரசாங்கம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.