வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் பயணம் மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என நாசா தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் 5ம் தேதி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இவர்களை பூமிக்கு மீட்டு வர எலான் மஸ்கின் உதவியை நாசா நாடியது.
எக்ஸ் சமூகவலைதள நிறுவனர் எலான் மஸ்க் க்ரூ டிராகன் என்ற பிரமாண்டமான விண்கலத்தை வைத்து இருக்கிறார். இதனால் எலான் மஸ்கை நாசா கடவுள் போல் நம்பி இருந்தது. நாசாவும், எலான் மஸ்க்கும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, 2025 பிப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வர வேண்டும். ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தற்போது கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், க்ரு டிராகன் விண்கலம் விண்வெளிக்கு ஏவ கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. மார்ச் மாதம் இறுதியில் தான் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும், பூமிக்கு திரும்ப அழைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.