சிட்னி: ‘பிக் பாஷ் லீக்’ போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாச, சிட்னி சிக்சர்ஸ் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில், ‘பிக் பாஷ் லீக்’ 14வது சீசன் நடக்கிறது. சிட்னியில் நடந்த லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெர்த் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
சிட்னி அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் (121 ரன், 64 பந்து, 7 சிக்சர், 10 பவுண்டரி) கைகொடுக்க, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 220 ரன் குவித்தது. கடின இலக்கை விரட்டிய பெர்த் அணிக்கு கேப்டன் ஆஷ்டன் டர்னர் (66*) ஆறுதல் தந்தார். பெர்த் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 206 ரன் எடுத்து தோல்வியடைந்தது.
முதல் இடம்: ஒட்டுமொத்த ‘டி-20’ல் தனது 4வது சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித், ‘பிக் பாஷ் லீக்’ அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பென் மெக்டெர்மாட் (ஹோபர்ட் ஹரிகேன்ஸ்) உடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 3 சதம் அடித்துள்ளனர். இதில் ஸ்மித், 32 போட்டியில் 3வது சதத்தை பதிவு செய்தார். மெக்டெர்மாட், இதுவரை 100 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
சமீபத்திய ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை எந்த அணியும் வாங்கவில்லை. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘பிக் பாஷ்’ போட்டியில் சதம் விளாசியுள்ளார்.