கெபேஹா: மார்க்ரம் அரைசதம் கடந்து கைகொடுக்க தென் ஆப்ரிக்க அணி முன்னிலை பெற்றது.
தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கெபேஹாவில் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 358 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 242/3 ரன் எடுத்திருந்தது. மாத்யூஸ் (40), கமிந்து (30) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் மார்கோ யான்சென் பந்தில் மாத்யூஸ் (44), கமிந்து மெண்டிஸ் (48) அவுட்டாகினர். கேப்டன் தனஞ்செயா டி சில்வா (14), குசால் மெண்டிஸ் (16) ஏமாற்றினர். பிரபாத் ஜெயசூர்யா (24) ஆறுதல் தந்தார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 328 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட் சாய்த்தார்.
மார்க்ரம் அபாரம்: பின் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு டோனி டி ஜோர்ஜி (19), ரியான் ரிக்கெல்டன் (24) ஆறுதல் தந்தனர். பொறுப்பாக ஆடிய மார்க்ரம் (55) அரைசதம் விளாசினார். தேநீர் இடைவேளைக்கு பின் தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 135 ரன் எடுத்து, 165 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஸ்டப்ஸ் (16), கேப்டன் பவுமா (12) அவுட்டாகாமல் இருந்தனர்.