செஞ்சுரியன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தென் ஆப்ரிக்க அணி முன்னேறியது. செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 211, தென் ஆப்ரிக்கா 301 ரன் எடுத்தன. பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன் எடுத்தது. பின், 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, 3ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 27/3 ரன் எடுத்திருந்தது. மார்க்ரம் (22) அவுட்டாகாமல் இருந்தார்.
நான்காம் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் கைவசம் வைத்திருந்த தென் ஆப்ரிக்காவுக்கு இன்னும் 121 ரன் தேவைப்பட்டது. மார்க்ரம், கேப்டன் பவுமா ஜோடி ஆறுதல் தந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்த போது முகமது அபாஸ் ‘வேகத்தில்’ மார்க்ரம் (37) போல்டானார். தொடர்ந்து அசத்திய அபாஸ் பந்தில் பவுமா (40) ‘பெவிலியன்’ திரும்பினார்.
டேவிட் பெடிங்காம் (14), வெர்ரின்னே (2), கார்பின் போஷ் (0) ஏமாற்றினர். தென் ஆப்ரிக்க அணி 99 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின் இணைந்த மார்னோ யான்சென், ரபாடா ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. அமீர் ஜமால் வீசிய 39வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த ரபாடா, முகமது அபாஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தார்.
தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்து ‘திரில்’ வெற்றி பெற்றது. யான்சென் (16), ரபாடா (31) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் முகமது அபாஸ் 6 விக்கெட் சாய்த்தார். இந்த வெற்றியின்மூலம் தென் ஆப்ரிக்க அணி முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குள் (2025, ஜூன் 11-15, லண்டன், லார்ட்ஸ்) நுழைந்தது.
புள்ளிப்பட்டியல்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தென் ஆப்ரிக்கா முன்னேறியது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையில் போட்டி ஏற்பட்டுள்ளது.