சைஃப் அலிகான் அபாய கட்டத்தைக் கடந்தார்

வீட்டினுள் புகுந்த மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த பிரபல பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டதாக அவரைச் சார்ந்தோர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 7 குழுக்களை அமைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை லீலாவதி மருத்துவமனையில் சைஃப் அலிகான் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அறிக்கை வெளியிட்ட சைஃப் அலி கான் தரப்பினர், “சைஃப் அலி கான் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தில் இருந்து மீண்டுள்ளார். அவர் தற்போது குணமடைந்து வருகிறார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பாதுகாப்பாக உள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். லீலாவதி மருத்துவமனையின் மருத்தவர் நிராஜ் உத்தமணி, மருத்துவர் நிதின் டாங்கே, மருத்தவர் லீனா ஜெயின் உள்ளிட்ட குழுவினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். அவர் நலம் பெற பிரார்த்தனையில் ஈடுபட்ட அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அறிக்கை: சைஃப் அலி கானின் மகன் ஜஹாங்கீரின் வீட்டில் உள்ள படுக்கையறையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதாக பாந்த்ரா பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளது. வீட்டு வேலை செய்யும் அரியாமா பிலிப்ஸ் என்கிற லிமா, எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, நடிகர் சைஃப் அலி கான் தலையிட்டதாகவும், அப்போது, அடையாளம் தெரியாத நபர் சைஃப் அலி கானை கூர்மையான பொருளால் தாக்கி காயப்படுத்தியதாகவும், இந்த சம்பவத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்மணியும் காயமடைந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைஃப் அலி கானின் பாந்த்ரா வீட்டில் உள்ள அனைத்து வீட்டுப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களிடமும் பொலிஸார் விசாரித்துள்ளனர். இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர் அங்கு பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் ஒருவருக்கு நன்கு தெரிந்தவராக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தடயவியல் குழு சோதனை: ஊடகங்களிடம் பேசிய தடயவியல் துறை அதிகாரி, “சம்பவ இடத்திலிருந்து கைரேகைகளை நாங்கள் சேகரித்துள்ளோம், மீதமுள்ளவற்றை எங்கள் உயர் அதிகாரி விபரிப்பார்.” என்றார்.

இது குறித்து தெரிவித்த லீலாவதி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி, “சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அவருக்கு 6 இடங்களில் காயங்கள் இருந்தன. ஒரு காயம் அவரது முதுகுத் தண்டவடத்தின் அருகே உள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை செய்கிறோம். அவருக்கு நரம்பியல் அறுவை நிபுணர் நிதின் டாங்கே, காஸ்மடிக் அறுவை நிபுணர் லீனா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் நிஷா காந்தி உள்ளிட்டோர் இணைந்து அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னரே காயத்தின் தன்மை பற்றி மேலதிக தகவல்களைத் தெரிவிக்க முடியும்.” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VADALI TV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here