டமாஸ்கஸ் : எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை, கிளர்ச்சி படைகள் நேற்று கைப்பற்றின. அதற்கு முன் அந்த நாட்டின் அதிபர் பஷார் அல் ஆசாத், 59, தப்பியோடினார்.
கடந்த 54 ஆண்டுகளாக இருந்த ஆசாத் குடும்பத்தினரின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அலெப்போ நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் சுற்றி வளைத்தன.இதைத் தொடர்ந்து, டாரா, குனேத்ரா, சுவேடா ஆகிய நகரங்களையும் கைப்பற்றின. இதைத் தொடர்ந்து, தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றும் நோக்கத்தோடு, படைகள் முன்னேறின. மிக வேகமாக இந்தப் படைகள் முன்னேறின.
எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், சிரியா ராணுவம், போலீசார், டமாஸ்கசில் இருந்து வெளியேறினர். இதையடுத்து, நேற்று காலையில், டமாஸ்கசை கைப்பற்றியதாக கிளர்ச்சிப் படைகள் அறிவித்தன. இதற்கிடையே, அதிபர் ஆசாத், விமானம் வாயிலாக தப்பிச் சென்றார். இதையடுத்து, நாட்டின் நிர்வாகம் தங்களுடைய கட்டுப்பாட்டுகள் வந்துள்ளதாக கிளர்ச்சிப் படைகள் தெரிவித்தன.
ஆனால் ஆசாத் எந்த நாட்டுக்குச் சென்றார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதற்கிடையே, அவர் சென்ற விமானம், விபத்தில் சிக்கியதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.