
எமது வாழ்வியலின் கூறுகளான கலை, கலாசார, பண்பாட்டு மரபுகளைப் பேணுவதும், அவற்றின் தனித்துவம் குறையாது அடுத்த சந்ததியிடம் கையளிப்பதுமே எமது இருப்பை உறுதிசெய்யும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அராலி ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் 85ஆம் ஆண்டு விழாவின் முதல் நாள் நிகழ்வுகள், அண்மையில் நிலைய கலையரங்கில் விழாக்குழுத் தலைவர் மஞ்சுளா புஸ்பராசா தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான மதிப்பளிப்பை வழங்கிவைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது,
இருப்பழிந்துவரும் எமது சமூக மற்றும் வாழ்வியல் அடையாளங்களை மீள் நினைவூட்டும் வகையிலான கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதன் மூலம், இளைய சமுதாயத்தினரிடம் எமது மரபியல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அத்தகைய சமூகநிலைப்பட்ட சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்திருக்கக்கூடிய அராலி ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தினரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
சமூக நிறுவனங்களே ஒரு சமூகத்திற்கு அடையாளம் தரவல்லன என்ற அடிப்படையில் அராலி மண்ணின் அடையாளமாக உருவாகி, 85 ஆண்டுகளைக் கடந்தும் தன் செயல்நோக்கில் தளராது இயங்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் சமூகப் பணிகள் காலப்பெறுமதி மிக்கவை – என்றார்.