பிரேசிலில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில், 10 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து, 62 பயணிகளை ஏற்றிக் கொண்டு சிறிய ரக விமானம் ஒன்று, சாலொ பாலோ மாகாணத்திற்கு சென்று கொண்டு இருந்தது. சாலொ பாலோ மாகாணத்தில், கிராமடோ நகர் அருகே சென்று கொண்டு இருந்த போது, விமானியின் கட்டுப்பாட்டை விமானம் இழந்தது. விமானி நீண்ட நேரமாக தரையிறக்க போராடி பார்த்தார். ஆனால் எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.
குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் மேல் விமானம் விழுந்து நொறுங்கி தீ பற்றியது. இந்த விபத்தில் 10 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயமுற்றனர். இதில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.