கோப்பை வென்றது இந்தியா

வதோதரா: மூன்றாவது ஒருநாள் போட்டியில் தீப்தி சர்மா ‘ஆல்-ரவுண்டராக’ அசத்தினார். இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. வதோதராவில் 3வது போட்டி நடந்தது.

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரேணுகா சிங் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ கியானா (0), கேப்டன் ஹேலி மேத்யூஸ் (0), டீன்டிரா டாட்டின் (1) வெளியேறினர். ஷெமைன் (46), சினெல்லே (61) ஓரளவு கைகொடுத்தனர். தீப்தி சர்மா ‘சுழலில்’ ஜைதா (1), அபி பிளட்சர் (1), அஷ்மினி (4) சிக்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 38.5 ஓவரில் 162 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் தீப்தி சர்மா 6, ரேணுகா சிங் 4 விக்கெட் சாய்த்தனர்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (4), ஹர்லீன் தியோல் (1) ஏமாற்றினர். பிரதிகா (18) நிலைக்கவில்லை. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (32), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (29) ஓரளவு கைகொடுத்தனர். பின் இணைந்த தீப்தி சர்மா (39), ரிச்சா கோஷ் (23) நம்பிக்கை தந்தது. அபி பிளட்சர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரிச்சா வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய அணி 28.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

VADALI TV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here