அடிலெய்டு: இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய பேட்டர்கள் தடுமாறினர். டிராவிஸ் ஹெட் சதம் விளாச, ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்துகிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு), அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன் எடுத்திருந்தது.
லபுசேன் அரைசதம்: இரண்டாம் நாள் ஆட்டத்தில் பும்ரா ‘வேகத்தில்’ மெக்ஸ்வீனி (39), ஸ்டீவ் ஸ்மித் (2) வெளியேறினர். பின் லபுசேன், டிராவிஸ் ஹெட் அசத்தினர். லபுசேன் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்த போது லபுசேன் (64) ஆட்டமிழந்தார். அஷ்வின் ‘சுழலில்’ மிட்சல் மார்ஷ் (9) சிக்கினார்.
அபாரமாக ஆடிய ஹெட், டெஸ்ட் அரங்கில் தனது 8வது சதத்தை பதிவு செய்தார். இவர், 140 ரன்னுக்கு (4 சிக்சர், 17 பவுண்டரி) வெளியேறினார். அலெக்ஸ் கேரி (15), கேப்டன் கம்மின்ஸ் (12) நிலைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட் சாய்த்தனர்.
ரோகித் ஏமாற்றம்: 157 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ‘டாப்-ஆர்டர்’ பேட்டர்கள் ஏமாற்றினர். ராகுல் (7), ஜெய்ஸ்வால் (24), சுப்மன் கில் (28), அனுபவ கோலி (11), கேப்டன் ரோகித் (5) சோபிக்கவில்லை.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 128 ரன் எடுத்திருந்தது. ரிஷாப் பன்ட் (28), நிதிஷ் குமார் (15) அவுட்டாகாமல் இருந்தனர். முதல் 5 விக்கெட்டுகளை விரைவில் இழந்த நிலையில், ஆஸ்திரேலிய பிடியில் இருந்து இந்தியா தப்புவது கடினம்.
ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், பகலிரவு டெஸ்டில் அதிவேக சதம் (111 பந்து) விளாசிய வீரர்கள் வரிசையில் தனது சொந்த சாதனையை முறியடித்து முதலிடம் பெற்றார். இதற்கு முன், 2022ல் இங்கிலாந்துக்கு எதிரான ஹோபர்ட் பகலிரவு டெஸ்டில் 112 பந்தில் சதம் விளாசி இருந்தார்.