இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை, மொபைல் போன் வாயிலாக மத்திய உள்துறை அமைச்சகம் துவக்கி உள்ளது.
கணினி, டேப்லெட், மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி, திருட்டு, மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு இணையவழி குற்றங்கள் நடக்கின்றன. போதிய விழிப்புணர்வு இல்லாததால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. போலீஸ் அதிகாரி என்று கூறி மிரட்டி பணம் பறிப்பது அதிகரித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், 60,000த்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இக்குற்றங்களை கட்டுப்படுத்தும் பணியில், மத்திய உள்துறை அமைச்சகம் இறங்கி உள்ளது.
முதல் கட்டமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை துவக்கி உள்ளது. மொபைல் போனில் யாரையாவது தொடர்பு கொள்ளும் போது, ‘ஆன்லைன்’ மோசடி குறித்த விழிப்புணர்வு ஆடியோ ஒலிபரப்பப்படுகிறது.
அதில், ‘சைபர் குற்றங்கள் தொடர்பாக அழைப்பு வந்தால், யாரும் பயம் கொள்ள தேவையில்லை. இது தொடர்பாக, 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும்’ என, அறிவுரை வழங்கப்படுகிறது.