பீஜிங்: சீனாவில், எச்.எம்.பி.வி., என்ற புதுவகையான நுரையீரல் தொற்று பரவ துவங்கி இருப்பதால், மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது; இது பிற நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால், ஆசியா முழுதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
‘கோவிட் – 19’ எனப்படும் கொரோனா தொற்று பரவல், 2019 இறுதியில் சீனாவில் துவங்கி, அடுத்த 2 – 3 ஆண்டுகளுக்கு உலகையே ஸ்தம்பிக்க செய்தது. அந்த பாதிப்பினால் வீழ்ந்த சர்வதேச பொருளாதாரம், இப்போது தான் மெல்ல சுதாரித்து எழத் துவங்கி உள்ள நிலையில், சீனா, அடுத்த வெடிகுண்டை வீசியுள்ளது.
சீனாவின் பல்வேறு மாகாணங்களில், எச்.எம்.பி.வி., எனப்படும், ‘ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்’ என்ற தொற்று வேகமாக பரவ துவங்கியுள்ளது. இந்த தகவலை, சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதி செய்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களால், மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக, சீனாவின் வடக்கு பகுதியில் இந்த தொற்று பரவல் மிக தீவிரமாக உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எச்.எம்.பி.வி., தொற்று, நுரையீரலை தாக்கி கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். அனைத்து வயதினரையும் இது தாக்கக்கூடும் என்றாலும், குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தொற்று பரவல் குறித்து சீன அரசோ, உலக சுகாதார நிறுவனமோ இதுவரை அவசர நிலையை அறிவிக்கவில்லை.
இந்த புதிய தொற்றுப் பரவலை பல்வேறு ஆசிய நாடுகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. குறிப்பாக, சீனாவுக்கு அருகில் உள்ள நாடுகள் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
ஜப்பானில், கடந்த சில வாரங்களில், ‘இன்ப்ளூயன்ஸா’ தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், ஜப்பான் முழுதும் உள்ள 5,000 மருத்துவமனைகளில் 94,259 பேர் ப்ளூ தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இது வழக்கத்துக்கு மாறானது என, அந்நாட்டு சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.
எச்.எம்.பி.வி., என்றால் என்ன?
‘ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்’ என்றழைக்கப்படும் இந்த தொற்று, நுரையீரலின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள், முதியோர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் எளிதாக பாதிக்கப்படுகின்றனர் இந்த தொற்று முதல்முறையாக கடந்த 2001ல் கண்டறியப்பட்டது; தடுப்பூசி இல்லை.
அறிகுறிகள் என்ன?
ப்ளூ காய்ச்சல் மற்றும் இதர சுவாச தொற்றுகளின் போது ஏற்படும் அறிகுறிகளே தென்படும். இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை பொதுவான அறிகுறிகள்* தீவிர பாதிப்பு உள்ளோருக்கு மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா பாதிப்பு ஏற்படக்கூடும்* பாதிக்கப்படுவோர், மூன்று முதல் ஆறு நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எப்படி பரவும்?
எல்லா தொற்றுகளை போலவும், இருமல், தும்மலில் இருந்து வெளியேறும் நீர் துகள்களில் இருந்து மற்றவர்களுக்கு பரவுகிறதுதொற்று பாதித்தவர்களின் உடைமைகள் அல்லது கைகளை தொட்டுவிட்டு, மூக்கு, வாய் பகுதியை தொடும் போது பரவுகிறது.
தடுப்பு முறைகள்
கொரோனா தொற்றுக்கு பின்பற்றிய அதே வழிமுறைகள் தான். கைகளை அவ்வப்போது சோப் போட்டு கழுவுதல், தனிப்பட்ட சுகாதாரம், முக கவசம் அணிவது போன்றவை இதற்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
அச்சப்பட தேவையில்லை
இது குறித்து நம் நாட்டின் சுகாதார சேவைகள் இயக்குனரகத்தை சேர்ந்த டாக்டர் அதுல் கோயல் கூறுகையில், “எச்.எம்.பி.வி., வைரஸ் இதர நுரையீரல் தொற்றை போன்றது தான். வழக்கமான சளி, இருமல், காய்ச்சலை ஏற்படுத்தும். மற்றபடி அச்சப்பட தேவையில்லை. டிசம்பரில், சுவாசம் தொடர்பான பிரச்னைக்காக சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இருந்தாலும், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது,” என்றார்.