
வீட்டில் தனித்திருந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்! மாம்பிரம்பற்றை வீதி, தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த சி.குணதேவி (வயது – 69) என்ற மூதாட்டியே இதன்போது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், ஓய்வுநிலை ஆசிரியையான சகோதரியுடன் குறித்த முகவரியில் வசித்து வந்துள்ள நிலையில் சகோதரி நேற்று (20) ஞாயிறு காலை 7.00 மணி அளவில் உயிர்த்த ஞாயிறு தின வழிபாட்டிற்கு அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.
வழிபாட்டினை முடித்து காலை 9.00 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டில் தனித்திருந்த சகோதரி வீட்டின் சமையலறையில் தலையில் காயத்துடன் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.
அவசர நோயாளர் காவு வண்டியில் வந்த உத்தியோகத்தர் அவரது உடலை பரிசோதித்து ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிராம சேவகர் ஊடாக பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டதுடன் விசாரணை மேற்கொண்டனர்.
முன்னர் இடம்பெற்ற சம்பவம் தொடர்பலான சந்தேகநபரை அடையாளம் கண்டுகொண்ட பருத்தித்துறை பொலிசார் அவரை தேடிச்சென்று கைது செய்யப்பட்ட அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கொலை குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.