4 இந்தியர்கள் உட்பட 39 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய பைடன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். தற்போதைய அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டு சிறையில் உள்ள 1,500 கைதிகளுக்கு கருணை வழங்கிய பைடன், அவர்களின் தண்டனைக் காலத்தை குறைத்துள்ளார். அதேசமயம், தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 39 பேருக்கு அவர் பொதுமன்னிப்பு வழங்கினார்.

இது குறித்து பைடன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘செய்த தவறுக்கு வருந்தி, மறுவாழ்வில் ஈடுபடுவோருக்கு, அதிபர் என்ற முறையில் கருணை காட்டுவதில் எனக்கு மகிழ்ச்சி.

‘எனவே, தங்கள் சமூகங்களை வலிமையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட 39 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.

‘நீண்ட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 1,500 பேரின் தண்டனைகளையும் நான் குறைத்துள்ளேன். அவர்களில் பலர் இன்றைய சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் கீழ் குறைந்த தண்டனைகளைப் பெறுவர்’ என, தெரிவித்துள்ளார்.

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட 39 பேரில், நான்கு பேர் இந்தியர்கள். அவர்களில் ஒருவரான டாக்டர் மீரா சச்தேவாவுக்கு 2012ல், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சுகாதார துறையில் மோசடி மற்றும் போதைப்பொருள் சதியில் ஈடுபட்ட பாபுபாய் படேலுக்கு 2013ல், 17 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

போதைப்பொருள் வினியோகித்த வழக்கில், 2013ல், கிருஷ்ணா மோட் என்பவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. வாசனை திரவிய வினியோக தொழிலை பயன்படுத்தி, போதைப் பொருள் தயாரித்த குற்றத்துக்காக விக்ரம் தத்தாவுக்கு, 2012ல் 235 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் நால்வருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில், இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 1,500 பேரின் கருணை மனு ஏற்கப்பட்டு தண்டனை குறைக்கப்பட்டதும், விடுவிக்கப்பட்டதும் பாராட்டைப் பெற்றுஉள்ளது.

VADALI TV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here