டோக்கியோ: துணி துவைக்கும் இயந்திரம் போல, 15 நமிடங்களில் மனிதர்களை சுத்தப்படுத்தக்கூடிய வாஷிங் மெஷின் உருவாக்கி அசத்தி உள்ளது ஜப்பான் நிறுவனம்.
துணிகளை துவைத்து காயப்போடும் வாஷிங் மெஷின் நம் எல்லோருக்கும் தெரியும். அது மாதிரி, இப்போது ஆட்களையும் சுத்தம் செய்யவும் வாஷிங் மெஷின் வந்திருக்கிறது. இதை ஜப்பானிய நிறுவனம் உருவாக்கி, ‘டெமோ’ காட்டி வருகிறது.
அந்த இயந்திரத்தில் ஏறி படுத்துக் கொண்டால் போதும்; 15 நிமிடங்களில் ஆட்களை சுத்தப்படுத்தி விடும் இந்த இயந்திரம். ஜப்பானிய நிறுவனமான சயின்ஸ் கோ இதை கண்டுபிடித்து, அதற்கு ‘மிரைய் நிங்கன் சென்டாகுக்’ என பெயர் வைத்துள்ளது.
இது குறித்து சயின்ஸ் கோ., நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
மேம்பட்ட தண்ணீர் பீய்ச்சும் ஜெட் மற்றும் நுண்ணிய காற்று குமிழ்கள் ஆகியவற்றைக் கொண்ட ஸ்பா போன்ற அனுபவத்தை இந்த இயந்திரம் தரும். இதை பயன்படுத்துபவர்களுக்கு அமைதியான அனுபவம் கிடைக்கும்.
வெதுவெதுப்பான நீரில் பாதியளவு நிரம்பிய ஒரு வெளிப்படையான ஜெட் விமானம் போன்ற அமைப்புக்குள் நுழையும் போது, அதில் இருந்து வரும் அதிவேகமான நீரில் நுண்ணிய குமிழ்கள் வந்து, அவை உங்கள் உடல் மீது பரவி, அசுத்துங்களை அகற்றும்.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் உதவியால், துவைக்கப்படுபவர் உடல் அறிகுறிகளைக் கண்காணிக்கப்படும். அதன் அடிப்படையில், தண்ணீர் பீய்ச்சும் பம்ப்பின் அழுத்தம், தண்ணீரின் வெப்பம் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்த நவீனமயமாக்கப்பட்ட இயந்திரம், ஒசாகா எக்ஸ்போ -2025ல் அறிமுகமாகிறது. கண்காட்சியில் 1,000 பேர் பங்கேற்று அதை நேரடியாக அனுபவிக்க இருக்கின்றனர்.
அதற்கான சோதனையை தீவிரமாக செய்து மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். இது வாடிக்கையாளர் மத்தியில் புதிய புரட்சியை ஏற்படும் என உறுதியாக நம்புகிறோம்.
இந்த இயந்திரத்தை வாங்குவதற்கான முன்பதிவு இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.